×

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்ச்செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்களுக்கு அழைப்பு

திருவாரூர், மார்ச் 2:திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்ச்செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச் செம்மல்” என்ற விருதும் இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25.07.2014 அன்று சட்ட மன்ற பேரவை விதி 110ன்கீழ் அறிவித்திருந்தார்.

இவ்விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பெற்று வழங்கப் பட்டு வருகிறது. அறிவிப்பின்படி கடந்த 2015, 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் 128 பேருக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2020ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் அமைப்பு வைத்து அரும்பாடு படும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் பெறுகின்றன.
விருதுக்குரிய விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalar chithurai.com என்ற வலைதளத்தில் “விண்ணப்பப் படிவங்கள்” என்ற தலைப்பில் உள்ள இணைப்பின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தன் விவரக் குறிப்புடன் நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதிக்குள் அளிக்கப் பெறுதல் வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil ,lovers ,district ,Thiruvarur ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச...